Tuesday, September 5, 2017

ஆசிரியர் தினம்

எத்தனை எத்தனை பிள்ளைகளின் வாழ்வு
என்றைக்கும் சிறந்திருக்க எத்தனித்த மாண்பு 
ஏறுபவருக்கு ஏணியாய் ஏற்றம் தந்து 
எழுச்சியோடு பணி செய்யும் வல்லமை 

தாய்க்கு நிகரான மகிழ்ச்சி கொண்டீர் 
தன் பிள்ளை சான்றோன் எனக்கேட்டு 
பிறர் வளர்ச்சி கண்டு பொறாமையில்லை 
பெருமையாய் கூறுகிறீர் என்மாணவச் செல்வமென்று 

தந்தையாய் கண்டித்து தன்னிலை உணரவைத்தீர் 
தன்னம்பிக்கையே தரணியை வெல்லும் தந்திரமென்றீர் 
துவண்டு விழும் பிள்ளைகளுக்கு தோழனாய் 
தோள் கொடுத்து ஆறுதல் தந்தீர் 

ஏதும் அறியா பிள்ளைகளாய் வந்தவரை 
எல்லாம் அறிந்த அறிஞராய் ஆக்கினீர் 
ஏடுகளை மட்டும் அல்ல எழுதப்படாத 
எத்தனைப் பாடங்கள் கற்பித்தீர் எமக்கு 

நீல வானில் தெரியும் நக்ஷத்திரங்களாய் 
பிள்ளைகள் மின்ன பின் இருந்து 
ஒளி கொடுக்கும் ஒப்பற்ற ஒரு 
ஞாயிறான ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்

-சரஸ்வதி 


வாழ்க்கைப் பாடம்

பள்ளியில் கற்பதே பாடம் எனில்
நீயே என் பள்ளிக்கூடம் என்பேன்
ஏட்டு சுரைக்காய் போதுமென்பார் மத்தியில்
எட்டிப் பார் ஏழுலகும் உனதென்றாய்

பாதரசம் பற்றி கற்பிக்கவில்லை நீ
பாசத்தின் மேன்மையை எனக்கு கற்பித்தாய்
பாரினை ஆள பல்கலைகள் தேவையில்லை
பண்பின் உயரிய மொழி போதுமென்றாய்

பல பல்கலைக் கழகங்கள் கற்பிக்காததை
பார்உலகு கற்பிக்கும் பார்த்துவா என்றாய்
என்னுலகே நீதானே என் அன்னையே
வாழ்க்கைப் பாடம் கற்கிறேன் உன்னிடம்

என்றும் உன் மாணவியாய் அமர்ந்திருந்து
என் வாழ்வு மேன்மேலும் சிறக்க
என் அருகில் நீ வேண்டும்
எனும் வரம் தருவாயா நீ 

- சரஸ்வதி 

Thursday, August 24, 2017

பிள்ளையார் பாட்டு

பிள்ளை யார்என அகத்தியன் வினவிட
பிள்ளையாராய் பக்தருக்கு அருளிட வந்தான்

பானை வயிறுடன் பாரினைக் காக்கும்
பால்மணம் மாறா பச்சிளம் பிள்ளை

ஆனை  முகத்துடன் அன்புடன் அருளும்
அம்பிகைப் பெற்ற அதிசயப் பிள்ளை

காக்கையாய் வந்தான் காவிரி தந்தான்
கவலைகள் களைந்து நம்துணை நிற்பான்

மோதகப் ப்ரியனாம் மூஷிக வாஹனன்
மூவுலகு போற்றும் மூலா தாரன்

தந்தம் உடைத்து பாரதம் தந்தான்
தரணியைக் காக்கும் தேவாதி தேவன்

ஆற்றங்கரை எல்லாம் ஆலயம் கொண்டவன்
மரத்தின் அடியில் அருள்மழை பொழிபவன்

அருகம் புல்லில் ஆசை கொண்டவன்
ஔவை பாட்டியின் ஆருயிர் இறையவன்

வேழமாய் வந்து குறமகள் வள்ளியை
வேலவன் அடைந்திட வழிவகை செய்தவன்

மஞ்சளில் பிடித்திட மலைபோல் அருள்வான்
மானிடர் வாழ்வினை வளமுற செய்வான்

விரைந்தே வந்து வினைகள் தீர்க்கும்
விக்ன விநாயகா போற்றி போற்றி

Wednesday, July 19, 2017

என் காதல்

என்றும் மாறாத என் காதலே
எத்தனை எத்தனை  வருடங்கள் ஆகினும்
உன்னால் நான் கொள்ளும் மயக்கம்
அப்படியே இருக்க என்னதவம் செய்தேன்

வண்ண வண்ண உடை உடுத்துகிறாய்
பன்மொழி வார்த்தைகளில் ஜாலங்கள் காட்டுகிறாய்
உலகின் போதைப் பொருட்கள் தோற்றுப்போயின
உன் பெயரை கேட்டதுமே கிரங்குகிறேன்

பெற்றவரும் பாராட்டும் காதல் நீ
உன்னை நான் கரம் பிடிக்க
என்னை விடவும் என் பெற்றோர்
பெரு மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்கின்றனர்

தோள் கொடுக்கும் என்னுயிர் தோழியரோ
உன் மீது நான் கொண்டது
குருட்டுக் காதல் என்று ஏசினர்
உன் அருமை தெரியவில்லை அவர்களுக்கு

உன்மீது காதல் கொண்டவர் பலர்
எனினும் என் காதல் புனிதமானது
உன்னை என் கையில் ஏந்த
இவ்வுலகு மறந்து கண்கள் மூடுகிறேன்

ஏன் கையில் உன்னை அனைத்து
உன் மீது முகம் புதைத்து
உறங்கும் இன்பத்தை என்னவென்று சொல்வது
என் புத்தகமே என்தருமை காதலே !!


படிக்கலாம்னு புத்தகத்தை கையில் தொட்டாலே...... 
There was an error in this gadget