Thursday, January 23, 2014

கண்ணியம் !!!

இன்றைய நாகரீக உலகில் பலரிடமும் எடை எவ்வளவு என்று கேட்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்ட ஒரு அருமையான பண்பு .     "கண்ணியம் அவசியம் இல்லை எனக்கு"  -  என்று நினைக்கக் கூடிய தருணம் எவர் ஒருவர் வாழ்விலும் இல்லை என்பதே என் நிலைப்பாடு.

உண்ணும் முறையில், உடுத்தும் உடையில், பேசும் வார்த்தையில், பழகும் விதத்தில், எழுதும் எழுத்தில், எண்ணங்களில் என்று, வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் சுவாசத்தை போன்று, மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோரிடமும் இருக்க வேண்டியது கண்ணியம்.

இன்றைய  கால கட்டத்தில் சமூக ஊடகங்கள் பெருகி விட்ட நிலையில், யார்வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசக்கூடிய அறிவாற்றல் வளர்ந்து விட்டதாக நம்மில் பலர் எண்ணுகின்றோம் . பேசுவதிலும் கருத்து தெரிவிப்பதிலும்  தவறில்லை அதை எப்படி எவ்வாறு தெரிவிக்கிறோம் என்பதில் தான் சிறிது குழப்பம். 

எனக்கு சரி என்று படும் விஷயம்  பலருக்கு தவறு என்று தோன்றலாம்,  அதற்கு நான் பொறுப்பு ஆக முடியுமா? என்றால் முடியாது தான் - ஒப்புக்கொள்கிறேன். அனால் நான் தெரிவிக்கும் கருத்து கண்ணியமினமையாக, ஒரு சாராரை மட்டுமே தாக்குவதாக, புண்படுத்துவதாக இருக்க கூடாது என்பது தான்  என் நிலைப்பாடு. 

சரி தீடீரென இப்படி ஒரு பதிவு வரவேண்டிய அவசியம் என்ன??

இசையில் மிகச் சிறிதளவு ஈடுபாடு உள்ள ஒரு ரசிகையாக கடந்த ஓர் இரு மாதங்களாக  பல பதிவுகளையும் விமர்சனங்களையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது  எனக்கு.  குறிப்பாக பெண் கலைஞர்களை பற்றிய சில விமர்சனங்கள் மிக சரியானதாக இருப்பினும் பெரும்பாலான விமர்சனங்கள் பெண் கலைஞர் என்பதால் எழுதிய விதமும் விமர்சனமும் முற்றிலும் பாரபட்சம் கொண்டதாக மாறிவிடுகிறது.  ஒரு கலைஞரை விமர்சனம் செய்யும்பொழுது அந்த விமர்சனம் அவரின் திறமை, ஆற்றல் பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர....அவர் அணிந்திருக்கும் உடை ஆபரணங்கள் பற்றியதாக இருக்கக் கூடாது என்பது என்  கருத்து. 

யார் யாரை விமர்சனம் செய்தார்கள் - எதற்காக செய்தார்கள் - அதனால் உனக்கோ உன்னை சேர்ந்தவர்களுக்கோ என்ன பாதிப்பு - எழுதுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்று சிலர் நனைக்க கூடும். நம்மை பாதிப்பதை மட்டுமே பார்ப்போமானால் நமக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது . இப்படி பெண் என்கின்ற முறையில் பல விமர்சனங்களும் சமுக ஊடகங்களான Facebook, Twitter போன்றவற்றில் பதிவு எழுதும் சிலர் மிக தரக்குறைவான எண்ணங்களை பகிர்வது வேதனையை அளிக்கிறது. 

இதில் எழுதுபவர்கள் எல்லோரும் ஆண்கள் தான் என்று சொல்லிவிட முடியாது பெண்களே தான் பெண்களுக்கு எதிரி என்ற வசனத்தை உண்மையாக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய கீழ்த்தறமான விமர்சங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய  பெண்களே ஆமோதிப்பது வருத்ததிற்குரியது.

நான் பெண்ணுரிமை சமஉரிமை என்று பேசுவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. வெளியில் வேலைக்கு செல்லும் ஒவ்வொரு ஆணும் வீட்டில் அணியும் மிகச்சாதாரண உடையை தான்  அணிந்து செல்கிறார்களா வேலைக்கும் வெளியிலும். பெண் கலைஞர்  நகை அணிகிறார் மேக்-அப் போடுகிறார் என்று வருத்தப்படும் ஆண்களே எத்தனை ஆண்கள் இன்று முகத்தில் பவுடர்-உம், கழுத்தில் தங்க சங்கிலியும், கையில் மோதிரமும் அணிது கொண்டு அலைகிறார்கள் என்று நமக்கே தெரியும்.  அதை ஆமோதிக்கும் பெண்களும் ஒரு கலைஞரின் நிகழ்ச்சியை பார்க்க / கேட்க செல்லும்பொழுது எத்தனை ஆடம்பரமாக செல்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை பதிவு செய்கிறேன் 

விமர்சனங்கள் இரு வகை படும். நிறைகளை முதலில் பாராட்டிவிட்டு  தவறுகளையும் அழகாக பண்புடன் சுட்டி காட்டும் விமர்சனம். மற்றொன்று தவறுகளை மட்டுமே பேசும் ஒருவித விமர்சனம். இந்த இரண்டுமே இல்லாமல் ஒரு விமர்சனம் என்ற பெயரில் அவதூறு எழுதும் பேர்வழிகள் இனிமேலாவது தங்களை மாற்றிக்கொள்ளுவார்களா? 

இந்த பதிவு எத்தனை மக்களை போய் சேரும் என்று எனக்கு தெரியாது. அனால் படிக்கும் அனைவரும் இந்த பதிவில் இருக்கும் விஷயங்களை சரி என்று எண்ணும்பட்சத்தில் இதை பகிரவும்.  ஒரு வேளை சில விமர்சகர்கள் தங்கள் விமர்சங்களை விமர்சித்து பார்த்தால் நல்லது.

பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் இது போன்ற தவறான கருத்துகளுக்காக குரல் கொடுக்க பெண் சமூகம் எப்போதும் மறந்து விடாது.  

பொறுமையுடன் படித்த அதனை நண்பர்களுக்கும் நன்றி .