Sunday, October 1, 2017

மானுடப் பூக்கள்

இன்றுபூத்த புதுமலர் போல்
சிலகாலம் வாழும் இவ்வாழ்வில்
நானே என்ற அகம்பாவம்
மேலிட தடுமாறி நிற்கிறாய்
வகையறியாது தறிகெட்டு அலைகிறாய்
தன்னிலை அறியாது நடக்கிறாய்
உலகினில் திரும்பிய இடமெல்லாம்
வெறுப்பும் வேதனையும் பரப்புகிறாய்

தீர்வுகாண முற்பட்டேன் என்கிறாய்
முயன்றால் முடியாததும் உண்டோ
மூவுலகிலும் மேலானது அன்பன்றோ?
அன்பால் கரையாதது ஏதுமில்லை
அன்பன்றி இவ்வுலகில் ஏதுமில்லை
ஒருநிறப் பூக்கள் ஈர்ப்பதில்லை
வண்ணங்களும் வாசனைகளும் வேறானால்தான்
வாழ்வும் வசீகரமாகும் வானுக்குகீழே

மானிடரும் பூக்கள் போலே...
மொட்டாய் இருந்து மலர்கின்றோம்
எங்கே எத்தோட்டத்தில் மலர்வோம்
எங்கே எவரோடு இணைவோம்
வழிபாட்டுக்கோ வாயில் தோரணத்திற்கோ
கூந்தலுக்கோ  கூடுவிட்ட  சடலத்திற்கோ
சேர்வது நம்கையில் இல்லை
நம்மில் நல்லவரும் தீயவரும்
நாத்திகரும் ஆத்திகரும் பகுத்தறிவாளரும்
பல குணத்தவரும் உலவுகிறோம்

சிலகாலம் மணமும் வண்ணமும்
பரப்பி வாடி உதிர்ந்து
இந்த மண்ணோடு மண்ணாகிறோம்...
மலரும் எல்லா மலர்களிலும்
வாசமும் வண்ணமும் வண்டுகளும்
வெறும் சில காலங்களே
அவைகளைக் கண்டதும் நினைத்ததும்
மனதினில் எழும் பூரிப்பும்
புன்னகையுமே அவைகளின் வெற்றிஅன்றோ?
அதற்கெனவே மலர்ந்தன உலகினில்
அதுபோல் நாமும் புன்னகைப்பூத்து
அன்புமணம் பரப்பி பூவுலகில்
நம் தடம்பதித்துச் செல்வோம்.Tuesday, September 5, 2017

ஆசிரியர் தினம்

எத்தனை எத்தனை பிள்ளைகளின் வாழ்வு
என்றைக்கும் சிறந்திருக்க எத்தனித்த மாண்பு 
ஏறுபவருக்கு ஏணியாய் ஏற்றம் தந்து 
எழுச்சியோடு பணி செய்யும் வல்லமை 

தாய்க்கு நிகரான மகிழ்ச்சி கொண்டீர் 
தன் பிள்ளை சான்றோன் எனக்கேட்டு 
பிறர் வளர்ச்சி கண்டு பொறாமையில்லை 
பெருமையாய் கூறுகிறீர் என்மாணவச் செல்வமென்று 

தந்தையாய் கண்டித்து தன்னிலை உணரவைத்தீர் 
தன்னம்பிக்கையே தரணியை வெல்லும் தந்திரமென்றீர் 
துவண்டு விழும் பிள்ளைகளுக்கு தோழனாய் 
தோள் கொடுத்து ஆறுதல் தந்தீர் 

ஏதும் அறியா பிள்ளைகளாய் வந்தவரை 
எல்லாம் அறிந்த அறிஞராய் ஆக்கினீர் 
ஏடுகளை மட்டும் அல்ல எழுதப்படாத 
எத்தனைப் பாடங்கள் கற்பித்தீர் எமக்கு 

நீல வானில் தெரியும் நக்ஷத்திரங்களாய் 
பிள்ளைகள் மின்ன பின் இருந்து 
ஒளி கொடுக்கும் ஒப்பற்ற ஒரு 
ஞாயிறான ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்

-சரஸ்வதி 


வாழ்க்கைப் பாடம்
ள்ளியில் கற்பதே பாடம் எனில்
நீயே என் பள்ளிக்கூடம் என்பேன்
ஏட்டு சுரைக்காய் போதுமென்பார் மத்தியில்
எட்டிப் பார் ஏழுலகும் உனதென்றாய்

பாதரசம் பற்றி கற்பிக்கவில்லை நீ
பாசத்தின் மேன்மையை எனக்கு கற்பித்தாய்
பாரினை ஆள பல்கலைகள் தேவையில்லை
பண்பின் உயரிய மொழி போதுமென்றாய்

பல பல்கலைக் கழகங்கள் கற்பிக்காததை
பார்உலகு கற்பிக்கும் பார்த்துவா என்றாய்
என்னுலகே நீதானே என் அன்னையே
வாழ்க்கைப் பாடம் கற்கிறேன் உன்னிடம்

என்றும் உன் மாணவியாய் அமர்ந்திருந்து
என் வாழ்வு மேன்மேலும் சிறக்க
என் அருகில் நீ வேண்டும்
எனும் வரம் தருவாயா நீ 

- சரஸ்வதி 

Thursday, August 24, 2017

பிள்ளையார் பாட்டு

பிள்ளை யார்என அகத்தியன் வினவிட
பிள்ளையாராய் பக்தருக்கு அருளிட வந்தான்

பானை வயிறுடன் பாரினைக் காக்கும்
பால்மணம் மாறா பச்சிளம் பிள்ளை

ஆனை  முகத்துடன் அன்புடன் அருளும்
அம்பிகைப் பெற்ற அதிசயப் பிள்ளை

காக்கையாய் வந்தான் காவிரி தந்தான்
கவலைகள் களைந்து நம்துணை நிற்பான்

மோதகப் ப்ரியனாம் மூஷிக வாஹனன்
மூவுலகு போற்றும் மூலா தாரன்

தந்தம் உடைத்து பாரதம் தந்தான்
தரணியைக் காக்கும் தேவாதி தேவன்

ஆற்றங்கரை எல்லாம் ஆலயம் கொண்டவன்
மரத்தின் அடியில் அருள்மழை பொழிபவன்

அருகம் புல்லில் ஆசை கொண்டவன்
ஔவை பாட்டியின் ஆருயிர் இறையவன்

வேழமாய் வந்து குறமகள் வள்ளியை
வேலவன் அடைந்திட வழிவகை செய்தவன்

மஞ்சளில் பிடித்திட மலைபோல் அருள்வான்
மானிடர் வாழ்வினை வளமுற செய்வான்

விரைந்தே வந்து வினைகள் தீர்க்கும்
விக்ன விநாயகா போற்றி போற்றி

Wednesday, July 19, 2017

என் காதல்

என்றும் மாறாத என் காதலே
எத்தனை எத்தனை  வருடங்கள் ஆகினும்
உன்னால் நான் கொள்ளும் மயக்கம்
அப்படியே இருக்க என்னதவம் செய்தேன்

வண்ண வண்ண உடை உடுத்துகிறாய்
பன்மொழி வார்த்தைகளில் ஜாலங்கள் காட்டுகிறாய்
உலகின் போதைப் பொருட்கள் தோற்றுப்போயின
உன் பெயரை கேட்டதுமே கிரங்குகிறேன்

பெற்றவரும் பாராட்டும் காதல் நீ
உன்னை நான் கரம் பிடிக்க
என்னை விடவும் என் பெற்றோர்
பெரு மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்கின்றனர்

தோள் கொடுக்கும் என்னுயிர் தோழியரோ
உன் மீது நான் கொண்டது
குருட்டுக் காதல் என்று ஏசினர்
உன் அருமை தெரியவில்லை அவர்களுக்கு

உன்மீது காதல் கொண்டவர் பலர்
எனினும் என் காதல் புனிதமானது
உன்னை என் கையில் ஏந்த
இவ்வுலகு மறந்து கண்கள் மூடுகிறேன்

ஏன் கையில் உன்னை அனைத்து
உன் மீது முகம் புதைத்து
உறங்கும் இன்பத்தை என்னவென்று சொல்வது
என் புத்தகமே என்தருமை காதலே !!


படிக்கலாம்னு புத்தகத்தை கையில் தொட்டாலே...... 

Thursday, May 11, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள் "அப்பா"

அன்னையும் தந்தையும் அவனே
அறிவளித்த ஆசானும் அவனே
தோள்கொடுக்கும் தோழனும் அவனே
எங்கள் முதல்காதலனும் அவனே

உன்னை பார்த்தே அறிந்தோம்
நேர்மை இது என்று
உன்மொழிகளை கேட்டே தெரிந்தோம்
இனியவை கூறல் இதுஎன்று
உன்னை பார்த்தே  வள்ளுவனின்
அறத்துப்பால் அனைத்தும் கற்றோம்

தாத்தா என்ற ஓர்ஒலியில்
உலகம் மறக்கிறாய் நீ
பேரன் பேத்திகளின் விரும்பும்
கதைசொல்லும் கதாநாயகன் நீ

எப்படியும் வாழலாம் என்பதல்ல
இறைவன் அளித்த வாழ்வு
இப்படித்தான் வாழ வேண்டுமென்று
வாழ்ந்து காட்டுபவன் நீ

உன்பிள்ளைகளை நாங்கள் பிறக்க
என்ன தவம் செய்தோம்
முற்பிறப்பில் நன்மைகளே செய்திருக்கிறோம்
முதல்வனே உன்பிள்ளைகளாய் ஆனதால்

உன்னைக் போற்றிக் கொண்டாட
எங்கள் இப்பிறவி போதாது
பிறந்தநாள்  காரணம் கொண்டு
இன்னும் கொஞ்சம் கொண்டாடுகிறோம்பிறந்த நாள் வாழ்த்துக்கள் "அப்பா"

Wednesday, March 8, 2017

மாமணிக்கு மங்கையர் தின சிறப்பு வாழ்த்து

மாநிலம் தன்னில் மங்கையராய் பிறக்க
மாதவம் தன்னை செய்திடல் வேண்டுமே
மாதவம் செய்திட்ட மாமணியாம் சூடாமணி
மாசில்லா முழுமதியாய் பெற்றெடுத்த மங்கையர்க்கரசி

பெண்ணாய்நீ பிறந்ததால் பெருமை கொண்டது
பெண்மை என்னும் பார்போற்றும் பேராற்றல்
பாசமிகு வசந்தகுமாரி பட்டைதீட்டி மெருகேற்றிய
பட்டொளி வீசும் இசை பொக்கிஷமே

உன்குரல் கேட்டு மயங்கி நின்றேன்
உன்குரல் கேட்டு கவலைகள் மறந்தேன்
உன்குரல் கேட்டு குழந்தையாய் களிப்படைந்தேன்
உன்குரல் கேட்டே காலமெல்லாம் வாழ்ந்திருப்பேன்

உன்குரல் எனக்கு தைரியமூட்டும் தகப்பன்
உன்குரல் எனக்கு உயிர்தந்த  அன்னை
உன்குரல் எனக்கு அன்புபொழியும் தமக்கை
உன்குரல் என்னை வாழவைக்கும் தெய்வம்

எப்படி சொல்வேன் உன்குரலின் மேன்மையை
எத்தனை உருவெடுத்து என்வாழ்வில் கலந்திட்டாய்
என்னுயிர் மூச்சில் உன்குரல் கலக்க
என்வாழ்வை கைபிடித்து வழி நடத்துகிறாய்

நன்றி என்ற சொல்லும் சிறுத்து நின்றது
நாதத்தின் தலைவியாம் உன்அன்பின் முன்னே
நான் மட்டுமல்லாது மற்றும் பலரும்
நான்பெற்ற இன்பம் பெற்றிடக்  கண்டேன்

நானிலம் தன்னில் நல்லவை தழைக்கவே
நாதத்தின் மூலம் பொன்மகளேநீ நடத்தும்
நல்லதொரு வேள்வியை நாளும் தொடர
நல்வாழ்த்து பொழிகிறது இந்த அன்புநெஞ்சம்

  - சரஸ்வதி 

Friday, February 24, 2017

சம்போ மகாதேவா

நெடுந்துயர் உன்னை சுட்டெரிக்கும் நேரம்
நீ மறவாமல் என்னை நினைத்தால்
குளிர் நிலவுபோல் குளிர்ச்சி தந்திடுவேன்
என்றேஉரைத்திட பிறைநிலா தரித்தாய் சந்திரமௌலீசா

செருக்கு மேலிட்டு தன்னிலை மறந்து
தறிகெட்டு கங்கை வெள்ளமென ஓடும்
என்மனதை தடுத்தது உன்னடி சேர்க்கவே
கங்கையை முடிமேல் சூடினாய் கங்கேஸ்வரா

கொண்ட பார்வையம் செய்யும் செயலும்
நேர்பட இருந்தால் கண்களும் ஒளிரும் 
தீயது எல்லாம் தீயினில் போகுமென்பது 
உரைத்திட நெற்றிக்கண் காட்டினாய் நயனேஸ்வரா

அலைகடல் தோன்றிய ஆலகால விஷமாய்
ஆபத்து  வரினும் ஹரண்அவனை சிந்தையை
மறவாது நினைத்திட பேரிடர் விலகுமென
உரைத்திட விஷம்தனை அடக்கினாய் நீலகண்டா

வளைந்து நெளிந்து ஓடும் என்வாழ்வை
அறநெறி வழுவாது ஆன்றோர் போற்றிட
அறிவு பாதையில் என்னை செலுத்த
நாகப்பாம்பினை நகையாய் சூடினாய் நாகேஸ்வரா

பேதை என்வாழ்வில் பெரும்துயர் வரகண்டு
பொருத்திட மாட்டாள் என்பிள்ளை இவளென
பாய்ந்து வந்து காப்பேன் என்றுரைக்கவே
புலித்தோல் போர்த்தினாயோ என் தாயுமானவா

உருண்டு ஓடும் எனது வாழ்வின்
ஒரு நொடி கூட  திண்ணமாய் உன்னடியினிலே
உருண்டிட வேண்டும் என்பதை காட்ட
உருண்டையாய் ருத்திராக்ஷம் உடுத்தினாய் ருத்திராக்ஷரா

கவலைகள் போக குதூகலம் துளிர்க்க
துயரினை மறந்து துள்ளி குதிக்க
தப்பாமல் என்னை தியானம் செய்யஎன
உணர்த்திட உடுக்கை ஏந்தினாய் ஊர்துவலிங்கா

நிலை இல்லா இந்த வாழ்வில்
நிலையான அமைதி பெற தூயவனாய்
வாழ திருவடி தூக்கி நின்று
சிக்கென பற்றிடுவாய் என்றாயே நடராஜா

மாநிலம் வாழும் உயிர்கள் அனைத்தும்
என்னடி சேர்தலே இறுதியில் தத்துவம்
உன்உறைவிடம் அறிவாய் அறியாப்பிள்ளையே
என்பதைச்சொல்ல மயானம் நின்றாயே மசானவாசா

என்இந்த பிறவியில் ஏற்றம் பெறவே
உன்னடி பணிந்தேன் ஏற்று எம்மை
காத்து வீடு பெரு அருள்வாய்
ஜோதியாய் நின்ற சிவராத்திரி நாயகா.Thursday, February 23, 2017

உயிரினும் மேலாக ஒருவர்

கட்டி உதிர்த்த முத்தத்தில்
கரும்பின் இனிப்பும் காணாமற்போனது
வாரி அணைத்ததில் உடலெல்லாம்
விண்மீன்கள் கூட்டம் குடிகொண்டது
பேசிய வார்த்தையில் உலகின்
பெருமொழிகள் ஊமையாய் ஒடுங்கின
உன் நடை கண்டு
பொதிகை தென்றல் தலைக்கவிழ்ந்தது
உன் கண்களின் பிரகாசத்தில்
சூரியனும் சுட்டெரிக்க மறந்தது
உன் முகப்பொலிவில் வான்நிலா
வாசல் வர நாணியது
என் உயிரினும் மேலாய்
நேசிக்கும் ஏன் ஆருயிரே
என்னை அன்னை என்றழைத்து
இப்பிறவி பயனுற வந்தாய்நீ


Wednesday, February 22, 2017

காதலும் கல்யாணமும்

கண்டதும் கொள்ளும் காவியக் காதல் இல்லை
கண்களில் அச்சமுடன் கடற்கரையில் கால்பதித்ததும் இல்லை
இனம்புரியா வயதின் ஒருவித ஈர்ப்பும் இல்லை
முன்பின் அறிந்ததில்லை முகம்கூட பார்த்தது இல்லை

இவளுக்கு இவனென்று இறைவன் அழுத்தமாக எழுதியதை
இருகுடும்பம்  இன்முகத்தோடு அறிமுகம் செய்ய அறிந்திட்டோம்
ஈரைந்து நிமிடங்கள் நாணமுடன் வார்த்தைகள் பரிமாறி
இப்பிறப்பிற்கு எனக்கு நீயே துணை என முடிவெடுத்தோம்

சிலிர்க்கும் கனவுகள் தாங்கிய சிறுசிறு சந்திப்புகள்
சிறுதுளிரென உன்மேல் துளிர்த்த சின்ன காதல்
சூழ்ந்திருந்தோர் அறியாத சில தொலைபேசி நிமிடங்கள் 
சிந்தித்தால் இன்று சிலிர்ப்புடன் சிரிப்பும் ஒட்டிக்கொள்கிறது

மந்திரம் முழங்க பெற்றவர் பெருமை கொள்ள
மணமக்களாய் மேடை அலங்கரித்து கரம் பற்றினோம்
முன்னிருக்கும் புதுவாழ்வு தொடங்க வித்திட்டோம் ஒருமனதாய்
மலர்தூவிய பாதைகள் மட்டுமே தெரிந்தன கண்முன்னே

வாழ்க்கை என்னும் மிதிவண்டியின் இருசக்கரமாய் நாம்இருவர்
வழியெங்கிலும் மலர்களே பொழிய சிற்சில முட்களும்
வாழ்க்கை இதுவென உணர்த்த அவசியமாய் போனது
வலி பொறுத்து  தோள்கொடுத்தது முட்கள் களைகிறோம்

எண்ணம் போல் ரத்தினமாய் பிள்ளை செல்வம்
எல்லாம் பெற்றேன் இவ்வுலகில் இல்லை என்பதில்லை
என்கனவுகளை நீ காண்கிறாய்  உன்கனவை நான்காண்கிறேன்
எனதருமை காதலனே எல்லாமுமான என் உயிரே.