Friday, February 24, 2017

சம்போ மகாதேவா

நெடுந்துயர் உன்னை சுட்டெரிக்கும் நேரம்
நீ மறவாமல் என்னை நினைத்தால்
குளிர் நிலவுபோல் குளிர்ச்சி தந்திடுவேன்
என்றேஉரைத்திட பிறைநிலா தரித்தாய் சந்திரமௌலீசா

செருக்கு மேலிட்டு தன்னிலை மறந்து
தறிகெட்டு கங்கை வெள்ளமென ஓடும்
என்மனதை தடுத்தது உன்னடி சேர்க்கவே
கங்கையை முடிமேல் சூடினாய் கங்கேஸ்வரா

கொண்ட பார்வையம் செய்யும் செயலும்
நேர்பட இருந்தால் கண்களும் ஒளிரும் 
தீயது எல்லாம் தீயினில் போகுமென்பது 
உரைத்திட நெற்றிக்கண் காட்டினாய் நயனேஸ்வரா

அலைகடல் தோன்றிய ஆலகால விஷமாய்
ஆபத்து  வரினும் ஹரண்அவனை சிந்தையை
மறவாது நினைத்திட பேரிடர் விலகுமென
உரைத்திட விஷம்தனை அடக்கினாய் நீலகண்டா

வளைந்து நெளிந்து ஓடும் என்வாழ்வை
அறநெறி வழுவாது ஆன்றோர் போற்றிட
அறிவு பாதையில் என்னை செலுத்த
நாகப்பாம்பினை நகையாய் சூடினாய் நாகேஸ்வரா

பேதை என்வாழ்வில் பெரும்துயர் வரகண்டு
பொருத்திட மாட்டாள் என்பிள்ளை இவளென
பாய்ந்து வந்து காப்பேன் என்றுரைக்கவே
புலித்தோல் போர்த்தினாயோ என் தாயுமானவா

உருண்டு ஓடும் எனது வாழ்வின்
ஒரு நொடி கூட  திண்ணமாய் உன்னடியினிலே
உருண்டிட வேண்டும் என்பதை காட்ட
உருண்டையாய் ருத்திராக்ஷம் உடுத்தினாய் ருத்திராக்ஷரா

கவலைகள் போக குதூகலம் துளிர்க்க
துயரினை மறந்து துள்ளி குதிக்க
தப்பாமல் என்னை தியானம் செய்யஎன
உணர்த்திட உடுக்கை ஏந்தினாய் ஊர்துவலிங்கா

நிலை இல்லா இந்த வாழ்வில்
நிலையான அமைதி பெற தூயவனாய்
வாழ திருவடி தூக்கி நின்று
சிக்கென பற்றிடுவாய் என்றாயே நடராஜா

மாநிலம் வாழும் உயிர்கள் அனைத்தும்
என்னடி சேர்தலே இறுதியில் தத்துவம்
உன்உறைவிடம் அறிவாய் அறியாப்பிள்ளையே
என்பதைச்சொல்ல மயானம் நின்றாயே மசானவாசா

என்இந்த பிறவியில் ஏற்றம் பெறவே
உன்னடி பணிந்தேன் ஏற்று எம்மை
காத்து வீடு பெரு அருள்வாய்
ஜோதியாய் நின்ற சிவராத்திரி நாயகா.Thursday, February 23, 2017

உயிரினும் மேலாக ஒருவர்

கட்டி உதிர்த்த முத்தத்தில்
கரும்பின் இனிப்பும் காணாமற்போனது
வாரி அணைத்ததில் உடலெல்லாம்
விண்மீன்கள் கூட்டம் குடிகொண்டது
பேசிய வார்த்தையில் உலகின்
பெருமொழிகள் ஊமையாய் ஒடுங்கின
உன் நடை கண்டு
பொதிகை தென்றல் தலைக்கவிழ்ந்தது
உன் கண்களின் பிரகாசத்தில்
சூரியனும் சுட்டெரிக்க மறந்தது
உன் முகப்பொலிவில் வான்நிலா
வாசல் வர நாணியது
என் உயிரினும் மேலாய்
நேசிக்கும் ஏன் ஆருயிரே
என்னை அன்னை என்றழைத்து
இப்பிறவி பயனுற வந்தாய்நீ


Wednesday, February 22, 2017

காதலும் கல்யாணமும்

கண்டதும் கொள்ளும் காவியக் காதல் இல்லை
கண்களில் அச்சமுடன் கடற்கரையில் கால்பதித்ததும் இல்லை
இனம்புரியா வயதின் ஒருவித ஈர்ப்பும் இல்லை
முன்பின் அறிந்ததில்லை முகம்கூட பார்த்தது இல்லை

இவளுக்கு இவனென்று இறைவன் அழுத்தமாக எழுதியதை
இருகுடும்பம்  இன்முகத்தோடு அறிமுகம் செய்ய அறிந்திட்டோம்
ஈரைந்து நிமிடங்கள் நாணமுடன் வார்த்தைகள் பரிமாறி
இப்பிறப்பிற்கு எனக்கு நீயே துணை என முடிவெடுத்தோம்

சிலிர்க்கும் கனவுகள் தாங்கிய சிறுசிறு சந்திப்புகள்
சிறுதுளிரென உன்மேல் துளிர்த்த சின்ன காதல்
சூழ்ந்திருந்தோர் அறியாத சில தொலைபேசி நிமிடங்கள் 
சிந்தித்தால் இன்று சிலிர்ப்புடன் சிரிப்பும் ஒட்டிக்கொள்கிறது

மந்திரம் முழங்க பெற்றவர் பெருமை கொள்ள
மணமக்களாய் மேடை அலங்கரித்து கரம் பற்றினோம்
முன்னிருக்கும் புதுவாழ்வு தொடங்க வித்திட்டோம் ஒருமனதாய்
மலர்தூவிய பாதைகள் மட்டுமே தெரிந்தன கண்முன்னே

வாழ்க்கை என்னும் மிதிவண்டியின் இருசக்கரமாய் நாம்இருவர்
வழியெங்கிலும் மலர்களே பொழிய சிற்சில முட்களும்
வாழ்க்கை இதுவென உணர்த்த அவசியமாய் போனது
வலி பொறுத்து  தோள்கொடுத்தது முட்கள் களைகிறோம்

எண்ணம் போல் ரத்தினமாய் பிள்ளை செல்வம்
எல்லாம் பெற்றேன் இவ்வுலகில் இல்லை என்பதில்லை
என்கனவுகளை நீ காண்கிறாய்  உன்கனவை நான்காண்கிறேன்
எனதருமை காதலனே எல்லாமுமான என் உயிரே.